
தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் இரத்தக் களரி ஏற்படக்கூடும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரக்கணக்கானோரின் இரத்தக்களரி ஏற்படக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது மூன்று அணிகளாக பிளவடைந்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியால், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் இடம்பெற்று வருவதால் இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மறுபுறம் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.