
தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு!; யாழில் சராவை வினவிய சுகாதார அமைச்சர்!
ஐனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு வழங்குமா? என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனிடம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்றுக் காலை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பில் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கையில்:-
சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலத்திற்கு வருகை தந்திருந்தார் .இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படும் நிலையில் அதன் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இலங்கையில் 850 வகையான மருந்துவகைகளில் 40 வகையான மருந்துகளுக்கே தட்டுபாடு காணப்படுகின்றது என சுகாதார அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என கேட்டார் ? இதன் பொழுது எமது கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப் பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் எமது மத்திய குழுவில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தேன்.
இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன்,இதற்கு மக்கள் தமது வாக்குகளை யாருக்கு வழங்குவது என்பது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தார்.