
மட்டக்களப்பில் சதோச விற்பனையக விளம்பரப் பலகைக்கு கடும் எதிர்ப்பு; தமிழ் பிரதேசமா சிங்கள பிரதேசமா என தடுமாறும் மக்கள்
மட்டக்களப்பை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சதோச விற்பனை நிலையம் செயற்பட்டு வருகின்றதா? இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா?என பொதுமக்கள் கேள்வி எழுப்பி கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள அரசாங்க களஞ்சியசாலை கட்டிடத்தில் கடந்த ஆண்டு புதிதாக மட்டக்களாப்பு நகருக்கான சதோச விற்பனை நிலையம் அப்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனா மற்றும் தற்போதைய இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ் .வியாழேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த சதோச விற்பனை நிலையத்துக்கு இதுவரை விளம்பர பலகை இல்லாத நிலையில், அதன் வெளி வாசல் மதிலில் சிங்களத்தில் பெரிய எழுத்துக்களால் சதோச எனவும் கீழே தமிழில் மட்டக்களப்பு என பெயர் பொறிக்கப்பட்ட (பெனர்) நீண்ட நாட்களாக மதிலில் பொருத்தப்பட்டுள்ளது .
இந்த வாசகம் என்ன? சிங்ளத்தில் சதோசா தமிழல் மட்டக்களப்பு இந்த விளம்பர பலகையை எவ்வாறு தமிழ் மக்கள் வாசித்து புரிந்து கொள்ள முடியும். இங்கு வாழுகின்ற மக்கள் தமிழர்களா? சிங்கள மக்களா? தமிழ் பிரதேசமா அல்லது சிங்களப் பிரதேசமா? அல்லது தமிழர் பிரதேசத்தை சிங்கள பிரதேசமாக மாற்றும் திட்டமா? அல்லது சிங்களதமிழ்ஸ்சா, ஒன்றுமே புரியவில்லை.
இந்த செயற்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா? இந்த சதோச விற்பனை நிலைய இச் செயற்பாடின் பின்னணியில் யார்? அரசியலா? தமிழ்மக்களை சிங்கள மயமாக்கும் செயற்பாடா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி கடும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த விளம்பர பலகையை தமிழில் பொறிக்கப்பட்டு பொருத்த உரிய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.