
யாழ்., மிருசுவிலில் 3 வயதுச் சிறுமி திடீர் மாயம்
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுச் சிறுமி ஒருவர் புதன்கிழமை மாலை காணாமல் போனதைத் தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர், அப்பகுதி மக்கள் இணைந்து இரவிரவாக காணாமல் போன சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியைச் சேர்ந்த கபிலன் பவிசா (வயது-03) என்ற சிறுமியே காணாமல் போனவராவார்.
புதன்கிழமை மாலை தாயார் வீட்டில் படுத்திருந்த போது தனது சகோதரனுடன் மேற்படி சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார், இராணுவத்தினர், அப்பகுதி மக்கள் இணைந்து சிறுமியை இரவிரவாக தேடி வருகின்றனர்.
வயல் பகுதி ஊடாக சிறுமி நடந்து சென்ற கால்தடம் காணப்பட்டதாக தேடுதல் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.
அப்பகுதியில் இனம் தெரியாத நபர் ஒருவர் நடமாடியதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பிடித்து கொடிகாமம் பொலிசில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.