
முதலில் நடப்பது எந்தத் தேர்தல்?
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த வேண்டும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா முதலில் நடத்தப்படுமென கடந்த சிலநாட்களாகவே அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

