ரணிலின் தோல்வியை பசில் அறிந்துள்ளார்

ரணிலின் தோல்வியை பசில் அறிந்துள்ளார்

ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பசில் அறிந்துள்ளார் . அதன் வெளிப்பாடே இந்த பாராளுமன்ற கலைப்பு விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மொட்டு ராஜபக்‌ஷ குடும்பத்தின் சொத்து. ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க எந்த தேர்தல் சரியானது என்பதே அவர்களுக்கு இன்றுள்ள பிரச்சினை. மொட்டுவின் அடுத்த தலைவராக நாமலை கொண்டு வரவே வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதனாலயே சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கத்தக்க நாமலை தேசிய அமைப்பாளராக நியமித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி எந்த தேர்தலுக்கும் தயார். நாம் வெற்றி பெறுவோம். பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடந்தால் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவோம். ஜனாதிபதி தேர்தல் முதலில் நடந்தால் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பசில் அறிந்துள்ளார் . அதன் வெளிப்பாடே இந்த பாராளுமன்ற கலைப்பு விடயம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் எந்த அதிகாரமும் அமைச்சரவைக்கு இல்லை. இது ஜனநாயக உரிமை மீறலாகும்.

தேர்தலை நடத்த பணம் இல்லை எனக் கூறிக கொண்டு, தனது சொந்த வாக்குகளை பெருக்கிக் கொள்ள, 24 வருடங்களுக்கு முன்னர் மரணித்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை துரிதமாக நிர்மானிக்க வாக்குகளை பெறுவதற்கு வரிப்பணத்தை ஒதுக்கியுள்ளார். இது எதனை உணர்த்துகிறது.அவருடைய குடும்பம் இதை கோரவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத போக்கையே ஜனாதிபதி காட்டி வருகிறார். நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் தொடர்பான தீர்ப்பு, பிரஜா உரிமை தொடர்பான டயனாவின் தீர்ப்புகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனத்தில் கொள்ளாது கிடப்பில் போட்டுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசாங்கம் இதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது.

மருதானை பிரதேசத்தில், வறிய மக்களின் தேவைக்காக நிர்மானிக்கப்பட்ட 20 கோடி பொறுமதியான சனசமூக நிலையத்தை அரசாங்க தரப்புக்குச் சொந்தமானவர்கள் கையகப்படுத்தி வருகின்றனர். இது அநீதி.

கொழும்பில் வெள்ளம், மின்சார இணைப்புகளில் மரம் சரிந்து விழுவதால் ஏற்படும் உடனடி பாதிப்புகளுக்கு மாநாகர ஆணையாளர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது அசமந்தமாக செயற்பட்டு வருகிறார். உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காததால் பௌதீக கட்டுமானங்கள், பராமரிப்புகள் சரியாக மேற்கொள்ளப்படாமை குறித்து அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லாது போல் செயற்பட்டு வருகின்றன. மக்கள் குறித்த எந்த சிந்தனையும் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )